மக்கள் விரும்பினால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்த தயார்; ஆனால்...... இழுக்கும் பொன்.ராதாகிருஷ்ணன்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலத்தடி நீர் பாதிக்காது, மக்கள் விரும்பினால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்த தயார் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் மத்திய அரசியின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 15 நாட்களாக போராட்டம் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் சினிமா பிரபலங்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
பாஜக கட்சி தலைவர்கள் அனைவரும் ஹைட்ரோ கார்பன திட்டம் பாதுக்காப்பனது என மத்திய அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். நேற்று நெடுவாசல் போராட்டக் குழுவினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஹைட்ரோ கார்பனை திட்டத்தை நிறுத்த மத்திய அரசுக்கு மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
இதையடுத்து அரசு சார்பில் வெளியிட்ட செய்தி குறிப்பில், விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன திட்டத்தை மாநில அரசு அனுமதிக்காது என தெரிவிக்கப்பட்டது. மேலும் நெடுவாசல் மக்கள் போரட்டத்தை கைவிட வேண்டும் எனவும் முதல்வர் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள் முழுமையாக இந்த திட்டத்தை ஒழிக்கும் வரை போராட்டம் நடத்துவோம் என கூறி இன்று 15வது நாளாக தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இதுகுறித்து கூறியதாவது:-
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலத்தடி நீர் பாதிக்காது. மக்கள் விரும்பினால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்த தயார். 2007 ஆம் ஆண்டு வந்த திட்டத்துக்கு தற்போது எதிர்ப்பு ஏற்பட காரணம் தமிழக அரசின் பலவீனமே காரணம். இத்திட்டம் பற்றி மக்களுக்கு மாநில அரசு புரிதலை ஏற்படுத்த வேண்டும், என்றார்.