துரைமுருகனுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்த ஓபிஎஸ் மகன்!
தமிழக அரசியலை பொருத்தவரையில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் எதிரெதிர் துருவங்களாகத்தான் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அதிமுகவும், திமுகவும் கூட்டணி வைக்க ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பே இல்லை என்பதுதான் தமிழக அரசியலின் கள நிலவரம்
முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதாவும் கருணாநிதியும் இருந்தவரை பரஸ்பரம் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்தால் கூட மரியாதைக்கு ஒரு வணக்கம் கூட வைப்பதில்லை. அந்த அளவுக்கு இரு கட்சிகளும் பகைமையுடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஜெயலலிதா, கருணாநிதி மறைவிற்கு பின் ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது ஸ்டாலினை சந்திப்பதும் ஈபிஎஸ் முதல்வரான பின் திமுக பிரமுகர்கள் சிலர் சந்திப்பதும் நடந்து வருகிறது.
அந்த வகையில் இன்று தேனியில் சட்டமன்ற ஆய்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க திமுக பொருளாளரும் சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் வருகை தந்தார். அவரை தேனி தொகுதியின் எம்பியும் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் மகனுமான ரவீந்திரகுமார் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இருவரும் இணைந்து பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்தனர். இந்த நிகழ்வில் இருவரும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது