நாள் முழுவதும் பப்ஜி: பாட்டியை கொன்ற பேரன்! – சென்னையில் அதிர்ச்சி!
சென்னையில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிய நபர் தனது பாட்டியையே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடியை அடுத்துள்ள கண்ணபாளையம் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா. இவரது கணவர் பார்த்தசாரதி முன்னாள் ராணுவ வீரர் ஆவார். உடல்நல குறைவால் பார்த்தசாரதி இறந்த பின்பு குழந்தைகள் இல்லாத மல்லிகா தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு தூரத்து உறவில் பேரன் கோகுல் என்பவர் அடிக்கடி மல்லிகாவை சந்திக்க வந்து விட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மல்லிகா வீட்டிற்குள் தலையில் அடிபட்டு பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மல்லிகாவின் இறுதி சடங்கிற்கு பேரன் கோகுல் வராதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோகுலை அழைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
படித்த பட்டதாரி வாலிபரான கோகுல் படித்து முடித்துவிட்டு வேலைக்கு போகாமல் சதாகாலமும் பப்ஜி விளையாட்டில் மூழ்கியுள்ளார். மேலும் அடிக்கடி செலவுக்காக தனது உறவுமுறை பாட்டியான மல்லிகாவை சந்தித்து பணம் பெற்று வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று வழக்கம்போல மல்லிகா பாட்டியிடம் பணம் கேட்க சென்றுள்ளார். பணம் தர மல்லிகா மறுக்கவே ஆத்திரமடைந்த கோகுல் மல்லிகாவை சுவற்றில் மோதி அடித்து கொன்றுள்ளார். பிறகு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
விசாரணையில் குற்றத்தை ஒத்துக்கொண்ட கோகுல் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.