1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 26 நவம்பர் 2024 (17:22 IST)

மதுக்கடையை அகற்ற கூடாது: உண்ணாவிரதம் போராட்டம் செய்யும் மதுப்பிரியர்கள்..!

தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மது கடைகளை அகற்ற வேண்டும் என போராட்டம் நடத்தி வரும் நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மது கடைகளை அகற்றக்கூடாது என்று மது பிரியர்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த இருப்பதாக போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே குன்னியூர் என்ற பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகே டாஸ்மாக் மது கடை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. ஆனால் இந்த மது கடையால் பொதுமக்கள், மாணவர்கள், வியாபாரிகள் அதிகம் பாதிக்கப்படுவதாக கூறி, அதை அகற்ற வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
 
இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போராட்டம் நடத்திய அடுத்த நாளே மது பிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். "இந்த மது கடையை அகற்றிவிட்டால், நாங்கள் அடுத்த கிராமத்துக்கு சென்று தான் மது அருந்த வேண்டிய நிலை ஏற்படும். அதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்," என்று அவர்கள் கூறியுள்ளனர்.
 
மேலும், "குன்னியூர் கிராமத்தில் உள்ள மது கடையை மூடி விட்டால், கள்ளச்சாராயம் குடிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால் உயிர் இழப்புகள் ஏற்படும். பக்கத்து ஊரிலிருந்து மது அருந்தி விட்டு வாகனத்தில் திரும்பும்போது போலீசார் அபராதம் விதிக்கின்றனர். எனவே இங்குள்ள மது கடைகளை மூடக்கூடாது," என்றும் அவர்கள் போராட்டத்திற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
 
இந்த விவகாரம் திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
Edited by Siva