ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 16 ஜனவரி 2024 (12:20 IST)

3 மாதமாக டிமிக்கி கொடுத்த குற்றவாளி கைது..! தப்பிக்க முயன்ற போது காலில் எலும்பு முறிவு.!!

aquest
கூடலூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை மூன்று மாதத்திற்கு பிறகு போலீசார் கைது செய்தனர். தப்பிக்க முயன்ற போது கீழே விழுந்து அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி முல்லைநகர்  பகுதியைச் சேர்ந்தவர் விஜயரத்தினம். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம்  தீர்ப்பு அளித்தது.   இதை அடுத்து விஜயரத்தினம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 
கடந்தாண்டு, அக்டோபர் மாதம் 29ஆம் தேதி சிறை காவலர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, கோவை மத்திய சிறையில் இருந்து விஜயரத்தினம் தப்பி உள்ளார்.   நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில்  கூடலூர் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில்  ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு காவல்துறையினர் மூன்று மாதமாக குற்றவாளியை தேடி வந்தனர்.
 
இந்நிலையில் ஓவேலி வனப்பகுதியில் பதுங்கி இருந்த குற்றவாளி விஜயரத்தினம், அவரது வீட்டிற்கு செல்லும்போது, மாறுவேடத்தில் இருந்த போலீசார், அவரை பிடிக்க முயன்றனர். தன்னை பிடிக்க முயன்ற காவலர் முத்து முருகனை, குற்றவாளி விஜயரத்தினம்  பலமாக அடித்து தாக்கி படுக்காயங்களுடன்  கீழே தள்ளி விட்டு  ஓடி உள்ளார்.
 
விஜயரத்தினத்தை பிடிக்க போலீசார் பின் தொடர்ந்து சென்ற போது, அங்குள்ள ஆற்றை கடக்க முயன்ற விஜயரத்தினம்,  அங்கிருந்த பாறையில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவரது இடது காலில் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வலி தாங்க முடியாமல் கதறி துடித்த விஜய் ரத்தினத்தை போலீசார் மடக்கி பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும், படுகாயம் அடைந்த  காவலர் முத்து முருகனையும் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  சிகிச்சைக்கு பிறகு கோவை மத்திய சிறையில் விஜயரத்தினம் அடைக்கப்படுவார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.