தேமுதிக இல்லைனா எந்த கட்சியும் இல்லை! – தேர்தல் குறித்து பிரேமலதா விஜயகாந்த்
தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணியில்லாமல் எந்த கட்சியாலும் பெரும்பான்மை பெற முடியாது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்கள் தொடங்க சில மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த் ஜனவரி மாதத்தில் நடைபெறும் கட்சி பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார். இந்நிலையில் பரமக்குடி அருகே விழா ஒன்றில் கலந்து கொண்டபோது பேசிய பிரேமலதா விஜயகாந்த் ”கட்சியினர் அனைவரும் விஜயகாந்த் கிங் ஆக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். தற்போது அதிமுக, திமுக ஆகிய இரு பெரும் கட்சிகளிலும் ஜெயலலிதா, கலைஞர் போன்ற பெரிய தலைவர்கள் இல்லை. அதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியாலும் பெரும்பான்மை பெற முடியாது. அதனால் தான் தேமுதிக தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.
மேலும் கூட்டணிக்காக அதிமுக, திமுக இரு கட்சியினரும் தேமுதிகவிடம் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.