திருப்பூரில் 1.5 லட்சம் விசைத்தறிகள் வேலைநிறுத்தம்.. தினசரி ரூ.40 கோடி வருவாய் இழப்பு..!
திருப்பூர் மற்றும் கோவையில் விசைத்தறி வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில், தினசரி 40 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூலி உயர்வுக்கு சட்ட பாதுகாப்புடன் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும், மின்கட்டணம் உயர்வுக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மற்றும் திருப்பூரில் சுமார் ஒன்றரை லட்சம் விசைத்தறிகள் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் இதற்கு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இந்த வேலை நிறுத்தம் காரணமாக 10,000 விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக ஜவுளி உற்பத்தி மற்றும் அதனைச் சார்ந்த தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக தினசரி 40 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால், உடனடியாக அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி, வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
மின்கட்டண உயர்வு காரணமாக விசைத்தறி தொழிலாளர்கள் கடும் சிக்கலில் இருப்பதாகவும், அதேபோல் மற்ற கோரிக்கைகளையும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
இதனை அடுத்து, இன்று அல்லது நாளைக்குள் விசைத்தறி சங்கங்கள் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran