இந்தியா வருகிறார் சுனிதா வில்லியம்ஸ்.. உறவினர் தெரிவித்த தகவல்..!
ஒன்பது மாதங்களுக்குப் பிறகு பூமிக்கு திரும்பியுள்ள சுனிதா வில்லியம்ஸ் விரைவில் இந்தியா வர இருப்பதாக, அவருடைய உறவினர் தகவல் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ் இன்று பூமிக்கு திரும்பியுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பியதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக ஆளுநர் ரவி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சுனிதா வில்லியம்ஸின் அண்ணி, ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த போது, "சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பியது அற்புதமான அனுபவம். எங்களிடம் அவர் எப்போது இந்தியா வருவார் என்ற தகவல் இல்லை. ஆனால், நிச்சயமாக விரைவில் அவர் இந்தியாவுக்கு வருவார் என்று நம்புகிறேன்," என்று கூறினார்.
மேலும், "இந்தியா மற்றும் இந்தியர்களின் அன்பை அவர் உணர்ந்திருக்கிறார். அவர் விரைவில் பூமிக்கு திரும்புவார் என எங்களுக்கு நன்றாக தெரியும்," என்றும் தெரிவித்தார்.
சுனிதா வில்லியம்ஸை பத்திரமாக பூமிக்கு வரவழைத்த கடவுளுக்கு நன்றி தெரிவித்த "அவர் விரைவில் இந்தியா வருவதை, உங்களைப் போலவே நாங்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்," என்றார்.
Edited by Mahendran