முதுநிலை மருத்துவ மாணவி தற்கொலை: துயரத்தில் பங்கெடுக்கிறேன்.- சீமான்
முதுநிலை மருத்துவ மாணவி சுகிர்தாவின் மரணத்திற்கு காரணமானவர்களை விரைந்து கைது செய்து, கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
''குமரி மாவட்டம் குலசேகரம் மூகாம்பிகை தனியார் மருத்துவக்கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு பயின்று வந்த தூத்துக்குடி வி.டி.சி. நகரைச் சேர்ந்த சிவகுமார் அவர்களின் அன்புமகள் சுகிர்தா விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.
பெற்றெடுத்து, பேணி வளர்த்த அன்புமகளை இழந்து வாடும் சுகிர்தாவின் பெற்றோருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
முதுநிலை மருத்துவம் பயிலும் அளவிற்கு அறிவுத்தெளிவும், துணிவும் கொண்ட அன்புமகள் சுகிர்தாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, தற்கொலைக்குத் தூண்டியது யாராக இருந்தாலும் எவ்வித அரசியல், அதிகார தலையீடுகளுக்கும் இடமளிக்காமல் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சட்டப்படி கடும் தண்டனைப் பெற்றுதர வேண்டும். குறிப்பாக உடலளவிலும், மனதளவிலும் பாதிப்படையச் செய்தவர்கள் பற்றியும், தனது தற்கொலைக்கு காரணமானவர்கள் பற்றியும் மகள் சுகிர்தா கைப்பட எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பேராசிரியர்களிடம், காவல்துறை மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொணர வேண்டுமென தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.