1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 28 டிசம்பர் 2019 (11:20 IST)

மோடிக்காக பொங்கல் விடுமுறை ரத்தா? மாணவர்கள் அப்செட்!

ஜனவரி 16 ஆம் தேதி விடுமுறை அல்ல, மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை வெளியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
மாணவர்கள் பொதுத்தேர்வை நம்பிக்கையுடன் எழுதும் வகையில் பிரதமர் மோடி ஜனவரி 16 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் கலந்துரையாடும் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 
 
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து 66 மாணவர்கள் பங்கேற்கின்றனர். எனவே இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஜனவரி 16 ஆம் தேதி அரசு விடுமுறை ரத்து செய்யப்படுகிறது என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. 
 
ஆனால், உண்மை நிலவரம் குறித்து பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பிரதமர் மோடியின் நிகழ்ச்சி தூர்தர்ஷன், வானொலி மற்றும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் யூ டியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
 
எனவே, மாணவர்கள் வீடுகளில் இருந்து நிகழ்ச்சியை பார்த்து பயனடையலாம். வீடுகளில் பார்க்க முடியாத மாணவர்கள் விருப்பமிருந்தால் பள்ளிகளில் காணவே ஏற்பாடு செய்ய வேண்டி சுற்றறிக்க அனுப்பப்பட்டது. மற்றபசி விடுமுறை ரத்து என வெளியாகி செய்தி முற்றிலும் தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.