மீண்டும் அரசியலில் நாஞ்சில் சம்பத்: மக்களுக்கு மாரடைப்பு என பொன் ராதாகிருஷ்ணன் விமர்சனம்
டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் இருந்து கடந்த வருடம் விலகிய நாஞ்சில் சம்பத், இனிமேல் தன்னை அரசியல் மேடையில் பார்க்க முடியாது என்றும், தமிழ் இலக்கிய மேடைகளில் மட்டுமே பார்க்க முடியும் என்றும் அரசியலில் இருந்து தான் ஒதுங்குவதாகவும் கூறினார். அதேபோல் அவர் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
இந்த நிலையில் நேற்று சென்னை திநகரில் நடந்த திமுக கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட நாஞ்சில் சம்பத், ஸ்டாலினை புகழ்ந்து சில நிமிடங்கள் பேசினார். இதுகுறித்து கருத்து கூறிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 'அரசியலை விட்டு ஒதுங்குவதாக கூறிய நாஞ்சில்சம்பத் மீண்டும் அரசியலுக்கு வந்திருப்பதால் தமிழக மக்களுக்கு மாரடைப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக விமர்சனம் செய்தார்.
மேலும் தமிழகம் முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக பிரசாரம் செய்துவரும் பி.ஆர். பாண்டியன் அரசியல் பின்புலம் உடையவர் என்றும், அவர் விவசாயிகளின் தலைவராக அல்லாமல் அரசியல் உள்நோக்கத்தோடு செயல்பட்டுவருவதாகவும் கூறினார்.
மேலும் திமுக கூட்டணி குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், 'திமுக கூட்டணி பார்ப்பதற்கு பிரம்மாண்டம் போல காட்சி தந்தாலும் அக்கூட்டணி சரக்கு இல்லாத காலி டப்பா என விமர்சித்தார்.