எனது கோரிக்கையை ஏற்ற மத்திய அரசுக்கு நன்றி: டாக்டர் ராமதாஸ்
எனது கோரிக்கையை ஏற்ற மத்திய அரசுக்கு நன்றி என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
பிற்படுத்தப்பட்ட வகுப்பில் எந்தெந்த சாதிகளை சேர்த்து, இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை மீண்டும் மாநில அரசுகளுக்கே வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் என்று மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கூறியிருக்கிறார். இது வரவேற்கத்தக்கது
அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 102ஆவது திருத்தத்தின்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சாதிகளை சேர்க்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்று மராத்தா வழக்கில் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில் இது முக்கியத்துவம் பெறுகிறது
உச்சநீதிமன்றத் தீர்ப்பால் மாநிலங்களின் உரிமை பறிக்கப்படுவதாகவும், இந்த சமூக அநீதியைக் களைய அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும் என்றும் கடந்த மே 9-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதை இப்போது மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி
பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சாதிகளை சேர்க்கும் உரிமையை மாநிலங்களுக்கு மீண்டும் வழங்குவதற்காக அரசியல் சட்டத்தின் 342-ஆவது பிரிவை திருத்தும் மசோதாவை வரும் 19-ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்