வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 26 டிசம்பர் 2019 (18:51 IST)

மாபாதகர்களா... திமுக கோரங்களை கிளறும் பாமக பாலு!

திமுக தரப்பில் பாமக மீது குற்றம்சாட்டப்பட்டதற்கு பதிலடி திமுகவின் கோரங்களை கிளறியுள்ளார் பாமக கே.பாலு. 
 
பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் மக்களவைத் தேர்தலில் தோற்றதை அடுத்து மாநிலங்களவை உறுப்பினராக அதிமுக கூட்டணியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இருமுறை நாடாளுமன்ற அவைகள் கூடியுள்ளது. இதில் அவர் 15 சதவீதத்துக்கும் குறைவான நாட்கள் மட்டுவே அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டுள்ளார்.  
 
இரு விவாதங்களில் கலந்து கொண்ட அவர், எவ்வித கேள்வியும் எழுப்பவில்லை. மேலும் எந்த ஒரு தனி நபர் மசோதாவையும் அவர் கொண்டு வரவில்லை.  கலந்துகொண்ட நாட்களிலும் குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார் என டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டது.  
 
இதனைத்தொடர்ந்து டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை அலுவலகத்துக்கு ஆட்களுடன் சென்ற பாமக வினோபா தலைமையிலான பாமகவினர்  அலுவலகத்துக்குள் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியானது.  இதனை கண்டித்து திமுக எம்.பி டி.கே.எஸ் இளங்கோவன் அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாமக செய்திதொடர்பாளர் கே.பாலு, திமுகவையும், ஊடகங்களையும் இணைத்துப் பார்த்தால் முதலில் நினைவுக்கு வருவது என்ன? மதுரை தினகரன் அலுவலகம் கொழுந்து விட்டு எரியும் காட்சியும், அதில் பணியாற்றிய அப்பாவிகள் மூவர் உடல் கருகி உயிரிழந்த காட்சியும் தானே. 
 
குடும்பத் தகராறில் தினகரன் அலுவலகத்தை எரித்து, 3 தொழிலாளர்களை சாம்பலாக்கிய திமுகவின் முதன்மைக் குடும்பம், குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு அதிகார சுகத்தை பங்கிட்டுக் கொள்வதற்காக ‘‘இதயம் இனித்தது; கண்கள் பனித்தன’’ என்று கூறி கை குலுக்கிக் கொண்டன. 
 
ஆனால், அவர்களால் கொல்லப்பட்ட மூவரின் குடும்பங்கள் வாழ்வதற்கு வக்கற்று கிடக்கின்றனவே.... அந்தக் குடும்பங்களை திமுக தலைமை கண்டு கொண்டதா? இப்படிப்பட்ட மாபாதகர்களுக்கு பத்திரிகையாளர்கள் நலன் குறித்து பேசுவதற்கு அருகதையுண்டா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.