புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 30 செப்டம்பர் 2019 (06:59 IST)

பிரதமர் மோடி இன்று சென்னை வருகை! பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

சென்னை ஐ.ஐ.டியில் நடைபெறும் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வரவிருப்பதால் சென்னையில் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
 
சென்னை ஐ.ஐ.டி தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி வைர விழாவும், 56வது பட்டமளிப்பு விழாவும், இன்று ஐஐடி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் ஒன்றில் பிரதமர் மோடி சென்னைக்கு வருகிறார்.
 
சென்னை விமான நிலையத்தில் இருந்து சென்னை, ஐ.ஐ.டி. வளாகத்திற்கு காரில் வரும் பிரதமர் மோடி முதலில் ஐ.ஐ.டி. ஆராய்ச்சி பூங்கா வளாகத்திற்கு சென்று, 'இந்தியா- சிங்கப்பூர் ஹேக்கத்தான்' போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குகிறார். அதனையடுத்து ஐ.ஐ.டி. வளாகத்தில் நடக்கும் 56வது பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்கிறார். பட்டமளிப்பு விழா முடிந்தபின் அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார். இதனையடுத்து ஐ.ஐ.டி வளாகத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு காரில் சென்று விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.
 
இந்த நிலையில் சென்னையில் பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் மத்திய மாநில அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். பிரதமரின் வருகையை அடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐஐடி வளாகம் வரை போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது