வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2019 (08:34 IST)

துண்டான பெரியார் சிலையின் தலை: அறந்தாங்கி அருகே பரபரப்பு!

அறந்தாங்கி அருகே இருந்த பெரியார் சிலை ஒன்றின் தலை துண்டானதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தமிழகத்தில் அவ்வப்போது தலைவர்களின் சிலைகள் சேதமாக்கப்பட்டு வரும் நிலையில் நேற்றிரவு மர்ம நபர்கள் சிலர் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே உள்ள பெரியார் சிலையை சேதப்படுத்தியுள்ளனர். பெரியார் சிலையின் தலை துண்டானதோடு, அவரது சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த மூக்கு கண்ணாடியும் சேதமடைந்துள்ளது.
 
கடந்த 1988ஆம் ஆண்டு திக தலைவர் கி.வீரமணி திறந்து வைத்திருந்த இந்த சிலை தேர்தலை முன்னிட்டு துணியால் சுற்றி மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்றிரவு இந்த சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருந்ததால் அந்த பகுதியில் உள்ளவர்கள் இதுகுறித்து காவல்துறையினர்களிடம் புகார் அளித்து, சிலையை சேதப்படுத்தியவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
 
காவதுறையினர் இதுகுறித்து விசாரணை செய்து வருவதாகவும் விரைவில் சிலையை சேதப்படுத்தியவர்களை பிடித்துவிடுவோம் என்றும் கூறியுள்ளனர். தேர்தல் நேரத்தில் கிருஷ்ணர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கி.வீரமணி கூறியதால் இந்த சிலை சேதப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது