திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 20 நவம்பர் 2019 (13:02 IST)

10 அடி குழிக்குள் தியானம் செய்யும் நிஜானந்தா! – படையெடுத்த கிராம மக்கள்

ஈரோடு மாவட்டத்தில் 10 அடி குழிக்குள் தியானம் செய்து வரும் சாமியாரை தரிசிக்க கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருக்கின்றனர்.

ஈரோடு மாவட்டம் நல்லிக்கவுண்டன்புதூரை சேர்ந்தவர் விஸ்வநாதன். தனது 32 வயதில் குடும்பத்தை பிரிந்து துறவியாக சென்ற விஸ்வநாதன் சில காலம் பள்ளிகளில் யோகா, ஆன்மீகம் குறித்த வகுப்புகளை எடுத்து வந்திருக்கிறார்.

பிறகு காசி, வாரணாசி, ரிஷிகேஷ் என பல பகுதிகளுக்கும் ஆன்மீக பயணம் சென்று முழுவதும் சன்னியாசியான விஸ்வநாதனுக்கு கனவில் தோன்றிய மகான் உலக நன்மைக்காக சொந்த ஊருக்கு சென்று 10 அடி ஆழத்தில் சிவனை வைத்து தியானம் செய்ய சொல்லியதாக கூறப்படுகிறது.

பிறகு ஊருக்கு வந்த விஸ்வநாதன் தனது பெயரை நிஜானந்த காசி விஸ்வநாத சாமி என்று மாற்றியுள்ளார். தன் வீட்டருகே 10 அடி ஆழம் குழி தோண்டி அதற்குள் சிவலிங்கத்தை வைத்து வழிப்பட்டபடி மவுன விரதம் இருந்து வருகிறார்.

கடந்த 17ம் தேதி இவர் தொடங்கிய தியானம் குறித்த செய்தி அருகில் உள்ள ஊர்களுக்கும் பரவவும், பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் அவரை வணங்க கூட்டம் கூட்டமாக வந்தபடி இருக்கிறார்கள். ஒரு மண்டலத்திற்கு, அதாவது 48 நாட்களுக்கு அவர் அந்த குழிக்குள்ளேயே தியானமிருப்பார் என கூறப்படுகிறது.