திருவாரூர் இடைத்தேர்தல் - வேட்பாளர்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள் தெரியுமா ?
திருவாரூரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து திமுக, அதிமுக, அமமுக ஆகியக் கட்சிகள் தங்கள் வேட்பாளர் தேர்வை முடுக்கிவிட்டுள்ளனர்.
கலைஞரின் தொகுதியான திருவாரூர் அவரது மறைவுக்குப் பிறகு காலியாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து ஆகஸ்ட் மாதம் முதல் 5 மாதமாக சட்டமன்ற உறுப்பினர் இன்றி உள்ளது. இந்த தொகுதிக்கு ஜனவரி 28 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதையடுத்து திமுக, அதிமுக, அமமுக ஆகியக் கட்சிகள் போட்டியிடும் மும்முனைப் போட்டியாக இந்த தேர்தல் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் போன்றக் கட்சிகள் போட்டியில் இறங்கினாலும் இந்த மூன்று கட்சிகளுக்கு பெரிய அளவில் போட்டியாக இருக்க முடியாது என்பதே நிதர்சனம்.
திமுக, அதிமுக மற்றும் அமமுக ஆகிய மூன்று கட்சிகளும் இன்னும் ஓரிரு நாளில் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வேட்பாளர் தேர்வு படுதீவிரமாக நடைபெற்று வருகின்றன. கட்சிகள் எப்படித் தங்கள் வேட்பாளர்களைத் தேர்வு செய்கிறார்கள் என பலவாறு செய்திகள் பரவி வருகின்றன.
திருவாருர் தொகுதியில் ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதியினரின் வாக்குகளே அதிகம் என்பதால் அனைத்துக் கட்சிகளும் திமுக உட்பட அந்த சமூகத்தைச் சேர்ந்த கட்சிப் பிரமுகர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகத் தெரிகிறது. மேலும் இடைத்தேர்தல் என்பது பணத்தை தண்ணீராக செலவழிக்க வேண்டிய விஷயம் என்பதால் நல்ல ’வலுவான’ வேட்பாளராகவும் இருக்க வேண்டுமெனவும் கட்சிகள் எதிர்பார்க்கின்றன.
கலைஞர் இருந்தவரை சாதிப் பார்க்காமல் கலைஞருக்கு ஓட்டுப் போட்டு வெற்றி பெற வைத்த மக்கள் இப்போது இடைத்தேர்தலில் சாதிப் பார்த்து ஓட்டுப் போடுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.