புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 19 ஜூன் 2018 (11:26 IST)

18 எம்.எல்.ஏக்களிடம் டீல் பேசும் எடப்பாடி? - தினகரன் அதிர்ச்சி

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தங்கள் அணி பக்கம் இழுக்கும் முயற்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரிடையாக இறங்கியுள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது.

 
தினகரன் பக்கம் 18 எம்.எல்.ஏக்கள் சென்ற போதிலிருந்தே அவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டிருந்தார். அதற்கான பொறுப்பு ஒரு முக்கிய அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆனால், எந்த பலனும் இல்லை.
 
தற்போது தகுதி நீக்க வழக்கில் தினகரன் தரப்பு எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கவில்லை. எனவே, 18 எம்.எல்.ஏக்களும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். 3வது நீதிபதி நியமிக்கப்பட்டு தீர்ப்பு வெளியாவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அப்படியே தீர்ப்பு வெளியானாலும், நீதிபதியின் தீர்ப்பு, தலைமை நீதிபதியின் தீர்ப்பை பின்பற்றித்தான் இருக்கும் என்கிற கருத்து நிலவுகிறது. 
 
தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வந்து விட்டால் இடைத்தேர்தலைத்தான் சந்திக்க வேண்டும். அப்போது தினகரன் அணி சார்பாகத்தான் போட்டியிட முடியும். அப்படி போட்டியிடும் போது மக்கள் வாக்களித்து வெற்றி பெறச்செய்வார்கள் என்பதை உறுதியாக கூற முடியாது. எனவே, தங்களின் எம்.எல்.ஏ பதவி நீடிக்குமா என்கிற கலக்கம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

 
எனவே, அவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈட்டுபட்டுள்ள முதல்வர் பழனிச்சாமி அவர்கள் ஒவ்வொருவரிடமும் நேரிடையாக செல்போனில் பேச தொடங்கியுள்ளாராம். வணக்கம்.. நான் முதல்வர் பழனிச்சாமி பேசுகிறேன்’ என பேச துவங்கும் முதல்வர், நீங்கள் நம்ம ஆட்சிக்கு ஆதரவு கொடுங்கள். எங்கள் அணிக்கு வந்துவிடுங்கள். உங்களுக்கு தேவையான அனைத்தும் செய்து தரப்படும் என உரிமையாக பேசுகிறாராம். 
 
முதல்வரே நேரிடையாக இப்படி களத்தில் இறங்கியிருப்பது தினகரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.