வடசென்னையை மட்டும் தனிமைப்படுத்த முடிவா? அதிகாரிகள் ஆலோசனை
வடசென்னையை மட்டும் தனிமைப்படுத்த முடிவா?
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை போல தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக 1400 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
இருப்பினும் தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற பகுதிகளில் கொரோனா வைரஸ் மிகவும் குறைவாக உள்ளது என்பது ஒரு ஆறுதலாக உள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருவது சென்னை மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழுவும் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னையில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அடுத்த கட்ட நடவடிக்கையாக அதிக பாதிப்பு உள்ள பகுதிகள் முழுவதையும் தனிமைப்படுத்த அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. குறிப்பாக வட சென்னையில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் ராயபுரம், தண்டையார்பேட்டை போன்ற பகுதிகளில் பாதிப்பு மிக அதிகமாக இருப்பதாகவும் எனவே அந்த பகுதிகளை மட்டும் ஒட்டுமொத்தமாக தனிமைப்படுத்த சுகாதாரத் துறையினர் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
சென்னையில் ராயபுரத்தில் 3 ஆயிரத்தை தாண்டியும், தண்டையார்பேட்டையில் 2 ஆயிரத்தை தாண்டியும் கொரோனா பாதிப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கவை