1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 14 மே 2024 (13:30 IST)

வழக்கு நிலுவையில் இருந்தால் பாஸ்போர்ட் கிடையாது.! உயர் நீதிமன்றம் அதிரடி..!!

highcourt
கிரிமினல் வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் பாஸ்போர்ட் கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
வெளிநாடு செல்வதற்காக தனக்கு பாஸ்போர்ட் வழங்கக் கோரி சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தமிழரசன் என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
 
இதையடுத்து, தனக்கு பாஸ்போர்ட் வழங்குமாறு சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிடக்கோரி தமிழரசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டம் மங்களம் பேட்டை போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு கடலூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கின் விசாரணைக்கு உயர் நீதிமன்றத்தில் இடைக்கால தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. அதனால், மனுதாரருக்கு பாஸ்போர்ட் வழங்குமாறு மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.
 
அதற்கு, அரசு வழக்கறிஞர் வினோத் குமார், கடலூர் சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாரர் மீது விசாரணையில் உள்ள வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உண்மையை மறைத்து பாஸ்போர்ட் அலுவலகங்களில் விண்ணப்பித்தால் அதன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய பாஸ்போர்ட் சட்டத்தில் இடம் உள்ளது என்றார்.
 
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,  தனது மீதான குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும்போது அவர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்திருப்பது தெளிவாக தெரிகிறது எனக் குறிப்பிட்டார். இதுபோன்று தங்கள் மீதான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது பாஸ்போர்ட் கேட்டு உயர் நீதிமன்றத்தை அணுகுகிறார்கள் என்றும் அப்படி அனுமதி தரப்பட்டால் அது குற்ற வழக்குகளின் விசாரணையையே அழித்துவிடும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.


உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு இடைக்கால தடை உத்தரவு பெற்றுவிட்டதை காரணமாக கூறி பாஸ்போர்ட் வழங்க கோர முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதி, மனுதாரர் விசாரணை நீதிமன்றத்தில் உள்ள வழக்கை சந்தித்து அதன் தீர்ப்பின் அடிப்படையில் பாஸ்போர்ட் கோர உரிமை உள்ளது என்று தெரிவித்தார். குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும்போது பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க முடியாது எனக் கூறி இந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார்.