ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2024 (12:11 IST)

தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்..! வணிகர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!!

CM Meeting
வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க முன்வர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர்,  கலைஞரால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு வணிகர் நல வாரியம் தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.   
 
வணிகர்கள் நலனுக்காக திமுக ஆட்சி காலங்களில் எண்ணற்ற உதவிகளை செய்துள்ளதாகவும் வணிகர்களுக்காக ரூ.3.29 கோடி நிதி வழங்கியுள்ளதாகவும் முதல்வர் கூறினார். வணிக உரிமங்களை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ளும் வகையில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், வணிகர்கள் வர்த்தக மனப்பான்மையின்றி சேவை உள்ளத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
 
வணிகர்களுக்கும் அரசுக்கும் இடையே இடைத்தரகர்கள் இருக்கக் கூடாது என்று முதல்வர் தெரிவித்தார். நகர்புற உள்ளாட்சிகளில் உள்ள கடைகளுக்கான குத்தகை காலம் 12 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க முன்வர வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் வீதிகளில் தமிழைக் காணவில்லை என யாரும் சொல்லக்கூடாது என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்
 
வணிகர் நல வாரிய உறுப்பினர்கள் உயிரிழந்தால், வழங்கப்படும் நிதி ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும் என்று அவர் அறிவித்தார். வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 88,209 ஆக அதிகரித்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.