வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 27 டிசம்பர் 2019 (12:32 IST)

என்னங்கடா அண்ணனோட சின்னத்தையே காணல... கொதித்துப்போன தம்பிகள்!

கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு சீட்டில் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் பொறிக்கப்படாமல் இருந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழக ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. மக்கள் பலர் ஆர்வமாக வந்து வாக்குகளை செலுத்தி வருகின்றனர். பல இடங்களில் அமைதியான முறையில் தேர்தல் நடந்து வரும் நிலையில் சில இடங்களில் சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் தேர்தல் நடக்கிறது. 
 
அந்த வகையில், கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பல இடங்களில் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் பொறிக்கப்படாமல் இருந்துள்ளது. நாம் தமிழருக்கு வாக்கு சீட்டில் ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் கரும்பு விவசாயி என எழுதி மட்டும் வைக்கப்பட்டிருந்தது. 
இதனால் கடுப்பான நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளிடம் இது குறித்து முறையிட்டுள்ளனர். இதன் பின்னர் வாக்குச் சீட்டில் கரும்பு விவசாயி சின்னத்தை அதிகாரிகள் ஒட்டி பிரச்சனையை முடித்துள்ளனர். இருப்பினும் அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
அதேபோல திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு பகுதியில் 5 மற்றும் 6 வது வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்கு சீட்டுகளில் ஏற்கனவே குறிப்பிட்ட சின்னத்தில் முத்திரை குத்தப்பட்டிருப்பதை கண்டு வாக்காளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 
 
இதனால் தேர்தலில் முறைகேடு இருப்பதாக கூறி பலர் புகார் அளித்ததால் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.