வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 26 அக்டோபர் 2017 (13:04 IST)

டெல்லி அதிரடி முடிவு ; எடப்பாடி அரசு கவிழும் அபாயம்?

தமிழகத்தில் சட்டசபை தேர்தலை விரைவில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி மீது பொதுமக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். அமைச்சர்கள் மீது ஊழல் புகார், தினகரன் அணியுடன் மோதல், டெங்கு காய்ச்சல் பாதிப்பு, நீட் தேர்வு என இந்த அரசு பொதுமக்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. 
 
மேலும், தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் முன்னாள் ஆளுநர் வித்யாசாகரின் தலையும் உருண்டது. தற்போது புதிய ஆளுநர் வந்துள்ளார். முக்கியமாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காதது மத்திய அரசுக்கு கெட்ட பெயரை இன்னும் அதிகரித்துள்ளது.
 
எனவே, தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் மத்திய அரசு இருப்பதாக தெரிகிறது. மேலும், தாங்கள் திட்டமிட்டதை தமிழகத்தில் சாதிக்க முடியாது என்ற முடிவிற்கு வந்து விட்டதாகவும் தெரிகிறது. 
 
இதன் விளைவாக, நீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏற்ப தமிழக ஆளுநர் பன்வாரிலால் சுதந்திரமாக முடிவெடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டதாக தெரிகிறது.  அதோடு, தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத் தேர்தலை நடத்தும் திட்டமும் இல்லை எனக் கூறப்படுகிறது.  மொத்தமாக தமிழகத்திற்கு முன்கூட்டியே பொதுத்தேர்தலையும் நடத்திவிடலாம் என்கிற முடிவிற்கு மத்திய அரசு வந்துவிட்டதாக தெரிகிறது.
 
இதனால், தற்போதுள்ள ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளதால், ஆளும் எடப்பாடி தரப்பு கலக்கத்தில் ஆழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது.