கருணாநிதியுடன் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை
திமுக தலைவர் கருணாநிதியுடன், அக்கட்சியின் பொருளாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று இரவு திடீர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
சட்டமன்றத்தில் இன்றைய கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். இவரது உரைக்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா நாளை பேசுவார். இதனையடுத்து முதல் முறையாக எதிர்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் பேச உள்ளதால் அவர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனையில் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர்கள் சிலரும் உடனிருந்தனர். சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என கருணாநிதி அறிவுறுத்தினார்.
மேலும், முதல் முறையாக எதிர்கட்சி தலைவர் உரையாற்ற இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு திமுக தலைவர் கருணாநிதி சில குறிப்புகள் வழங்கியதாகவும், ஸ்டாலின் அவற்றை கவனமுடன் கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வருகின்றன.