புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 ஜூன் 2020 (13:16 IST)

இது திரைமறைவு போலீஸ் ஆட்சியா? – சாத்தான்குளம் சம்பவத்திற்கு ஸ்டாலின் கண்டனம்!

சாத்தான்குளம் பகுதியில் போலீஸ் காவலில் அழைத்து செல்லப்பட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னீக்ஸ் ஆகியோர் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடை திறந்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவலர்களுடன் ஜெயராஜுக்கு வாய் தகராறு ஏற்பட்ட நிலையில் காவலர்கள் அவரையும், அவரது மகனையும் காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் உடல்நல குறைவால் இறந்ததாக கூறப்படுகிறது. காவல்துறையினர் தாக்கியதாலேயே அவர் உயிரிழந்தார் என பொதுமக்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ” சாத்தான்குளத்தில் காவல்துறை அழைத்துச் சென்ற ஜெயராஜ் அவரது மகன் பென்னீக்ஸ் இருவருமே இறந்துவிட்டார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. நெருக்கடி காலத்தில் வாய்த்தகராறுக்கும் உயிர் பறிப்பா? உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும்; உரிய நீதியும் வேண்டும்!” என  அறிக்கை விடுத்துள்ளார்.