திங்கள், 11 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 ஜூன் 2020 (10:56 IST)

தமிழன்னு சொல்லவே வெட்கப்படணும்!– ஹீரோ பட இயக்குனர் ஆவேசம்!

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனையை குறைத்திருப்பதற்கு ஹீரோ பட இயக்குனர் மித்ரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டில் உடுமலைப்பேட்டையில் சாதி கலப்பு மணம் செய்து கொண்டதற்காக கௌசல்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சங்கர் என்பவரை நடுரோட்டில் வைத்து வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கௌசல்யாவின் தந்தை உள்ளிட்ட சிலபேர் மீது வழக்கு தொடரப்பட்டு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. இதன்மீதான மேல்முறையீட்டில் மதுரை கிளை நீதிமன்றம் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைந்தததுடன், குற்றவாளியான கௌசல்யாவின் தந்தை சின்னசாமிக்கும் விடுதலை அளித்துள்ளது.

இதற்கு விசிக திருமாவளவன், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹீரோ படத்தின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் “வறட்டு கௌரவத்திற்காக ஒருவரின் உயிரை எடுப்பது வீரம் இல்லை, காட்டுமிராண்டித்தனம். அன்று உடுமலைப்பெட்டையில் நடந்தது சாதி ஆணவப் படுகொலை! இன்று வந்த தீர்ப்போ சமூகநீதியின் படுகொலை! இப்படி பட்ட சம்பவங்கள் தமிழ் சமூகத்தில் நடப்பதை நினைத்து வெட்கப்பட வேண்டும், தமிழன் என்று மார்தட்டுவோர்!” என்று கூறியுள்ளார்.