புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 ஜூன் 2020 (12:13 IST)

மதுரைக்காரங்களுக்கும் 1000 ரூபாய் தரணும்! – டிடிவி தினகரன் கோரிக்கை!

மதுரையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை மக்களுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முழுமுடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்திலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் நாளை முதல் மதுரையிலும் முழு முடக்கம் அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பதிவிட்டுள்ள அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் “கொரோனா பரவலைத் தடுப்பதற்காக முழு ஊடரங்கு அறிவிக்கப்பட்டுள்ள மதுரை பகுதி மக்களுக்கும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வழங்குவதைப் போல ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். சென்னையைப் போல மக்களைக் கூட்டமாக சேர்க்காமல் அவரவர் வீடுகளுக்கே சென்று இந்த நிதியை வழங்கிட வேண்டும். மேலும் மதுரையில் ஊரடங்கு அமலாகும் இடங்களில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் கட்டணமில்லாமல் உணவு அளிப்பதற்கான நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.