புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 18 ஜூன் 2019 (15:12 IST)

சிங்கப்பூர் போற அவசரத்தில்.. ஸ்டாலின் அதை செய்யல – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் “டெல்லியில் பதவிக்காக மடிப்பிச்சை ஏந்தி நிற்கிறார் எடப்பாடி” என கூறியதை கண்டித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

நாளுக்கு நாள் திமுக-அதிமுக இடையேயான தகறாரு முற்றிக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறது. இருவரும் அவரவர் அறிக்கையிலேயே ஒருவரை ஒருவர் சாடியும், விமர்சித்தும் வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டது பற்றி அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின் “டெல்லியில் பதவிக்காக மடிப்பிச்சை ஏந்தி நிற்கிறார் எடப்பாடி” என குறிப்பிட்டிருந்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

இதுகுறித்து இன்று அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டெல்லி பயணத்தில் எடப்பாடி பழனிசாமி ஒப்படைத்த மனுக்களின் விவரம், எந்தெந்த பிரச்சினைகள் குறித்து யார்யாரிடம் என்னென்ன பேசினார் என்பதை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலின் குறித்து அந்த அறிக்கையில் “ மக்களுக்காக அயராது உழைத்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதை இல்லை. ஸ்டாலின் 5 வருடங்களாக சென்னை மேயராகவும், 5 வருடங்கள் உள்ளாட்சி துறை அமைச்சராகவும் இருந்தபோது நிறைவேற்றாத மக்களுக்கான திட்டங்கள் பலவற்றை இன்று அதிமுக அரசு நிறைவேற்றி வருகிறது. அது பொறுக்கமுடியாமல் ஆதாரமற்ற குற்றசாட்டை ஸ்டாலின் சுமத்துகிறார். நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஆற்றிய உரையையும், முதல்வர் பிரதமருக்கு அளித்த மனுவையும் பற்றிய விவரங்கள் அன்றே ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் சிங்கபூர் போகும் அவசரத்தில் அதை படிக்கவில்லை போல. எனவே ஸ்டாலின் சிங்கபூரிலிருந்து வந்ததும் அதை படித்து தெளிவு பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.