புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 17 ஜூன் 2019 (15:19 IST)

என் சொத்தை விற்று விவசாயிகளின் கடனை அடைக்க தயார் – பொன்.ராதாகிருஷ்ணன் அதிரடி

”என் சொத்தை விற்று விவசாயிகளின் கடனை அடைக்க தயார். திமுக-காங்கிரஸ் கூட்டணி எம்.பிக்கள் தயாரா” என திருநாவுக்கரசரின் கிண்டலுக்கு பதிலடி கொடுத்து பேசியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.

பொன்.ராதாகிருஷ்ணன் சில நாட்களுக்கு முன்பு “வெற்றிபெற்ற எம்.பிக்கள் தங்கள் சொத்தை விற்றாவது விவசாயிகளின் கடனை அடைக்கவேண்டும்” என்று பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் “எம்.பிக்களின் சொத்தை விற்க சொல்லும் பொன்னார் முதலில் தன் சொத்தை விற்று விவசாயிகள் கடனை அடைப்பாரா?” என பேசியது இந்த பிரச்சினையை மேலும் வலுவாக்கியது.

இந்நிலையில் நேற்று கன்னியாகுமரியில் உள்ள முட்டைக்காட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்.ராதாகிருஷ்ணன் “நான் என் சொத்தை விற்றாவது விவசாயிகளின் கடனை அடைக்க தயார். ஆனால் திமுக-காங்கிரஸ் எம்.பிக்கள் தங்கள் சொத்தை விற்று கடனை அடைக்க தயாரா என்று திருநாவுக்கரசர் மற்ற எம்.பிக்களிடம் கேட்டு சொல்லட்டும்” என கூறியுள்ளார்.

மேலும் “ஸ்டெர்லைட் விஷயத்தில் கோபப்பட வேண்டுமென்றால் மக்கள் திமுக-காங்கிரஸ் கூட்டணி மீதுதான் கோபப்பட வேண்டும். தமிழக மக்கள் எதிர்த்து போராடும் விஷயங்கள் எல்லாம் அவர்கள் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டதுதான்” என்றும் பேசியுள்ளார்.