அமைச்சர் இந்த ஆணவத்தை அவரது அடிப்பொடிகளிடம் வைத்துக் கொள்ள வேண்டும்- அண்ணாமலை
கோவில்பட்டி நகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி சகோதரர் விஜயகுமாரை, திமுக அமைச்சர் கீதா ஜீவன் தகாத வார்த்தைகள் கூறி அவமானப்படுத்தியிருக்கிறார் என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
கோவில்பட்டி நகராட்சி இருபதாவது வார்டு உறுப்பினராக இருப்பவர் பாஜகவின் திரு. விஜயகுமார் அவர்கள். கடந்த நான்கரை வருடங்களாக அவரது பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளது என்றும், அவர் நகராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், கடந்த ஒன்றரை வருடங்களாக பல மனுக்கள் கொடுத்தும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை என்றும், தூத்துக்குடி தொகுதி திமுக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்களிடம் மனு கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியான சகோதரர் விஜயகுமார் அவர்களை, திமுக அமைச்சர் கீதா ஜீவன் தகாத வார்த்தைகள் கூறி அவமானப்படுத்தியிருக்கிறார்.
திமுக உள்கட்சி அரசியலில், தன்னை கட்சி மேலிடத்துக்கு நெருக்கமானவராகக் காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ள அமைச்சர் கீதா ஜீவன், இந்த ஆணவத்தை எல்லாம் அவரது அடிப்பொடிகளிடம் வைத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் பிரச்சினைக்காக, பாராளுமன்ற உறுப்பினரிடம் மனு கொடுப்பதைத் தடுக்க நீங்கள் யார்?
ஒரு வார காலத்திற்குள் அந்தப் பகுதியின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றால், பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.