சொசைட்டி பாலின் சர்க்கரை தண்ணீரை கலந்து மோசடி! – கூட்டுறவு செயலாளர் மோசடி அம்பலம்!
திருவண்ணாமலையில் ஆவின் நிறுவனத்துக்கு கொண்டு செல்லும் பால் கேன்களில் கூட்டுறவு செயலாளர் சர்க்கரை தண்ணீரை கலந்து மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் சாவல்பூண்டி ஊராட்சி பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளராக உள்ளவர் புஷ்பநாதன். பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு தனி கட்டிடம் இல்லாததால் புஷ்பநாதன் தனது கடையில் வைத்து முகவர்களிடம் இருந்து பாலை வாங்கி ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பி வருகிறார்.
இந்நிலையில் முகவர்களிடம் இருந்து வாங்கும் பாலில் கேனுக்கு 4 லிட்டர் வரை புஷ்பநாதன் எடுத்து விட்டு அதற்கு பதிலாக சர்க்கரை தண்ணீரை கலந்து விடுவதாக புகார் எழுந்துள்ளது. ஆவின் நிறுவனத்திற்கு பால் கொண்டு செல்லும் ஓட்டுநரும் இதற்கு உடந்தை என்றும் நாள் ஒன்றுக்கு 120 லிட்டர் வரை இவ்வாறு மோசடி செய்திருப்பதாகவும் கூறப்படும் நிலையில், புஷ்பநாதன் பாலில் சர்க்கரை தண்ணீர் கலக்கும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.