நாளைக்கே எக்ஸ்ட்ரா பால் பாக்கெட் வாங்கி வச்சிகோங்க மக்களே...
பால் முகவர்களும் வரும் 22 ஆம் தேதி முற்றிலுமாக பால் விநியோகத்தில் ஈடுபடப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் வேகமாக பரவியுள்ள கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தீவிரமடைய தொடங்கியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று மக்களிடையே தொலைக்காட்சி வழியாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி கொரோனா பாதுகாப்பு ஒத்திகையாக எதிர்வரும் 22 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஊரடங்கு விதிமுறையை பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் மாநில அரசுகள் ஊரடங்கை செயல்படுத்த மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நாளை மறுநாள் பிரதமரின் ஊரடங்கு திட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில் தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்துவதாக அறிவித்துள்ளன.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம், சுமார் 1.5 லட்சம் பால் முகவர்களும் வரும் 22 ஆம் தேதி காலை 7.00 மணிக்கு மேல் முற்றிலுமாக பால் விநியோகத்தில் ஈடுபடப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.
ஆனால், மக்களுக்கு எந்த தட்டுப்பாடும் வரக்கூடாது என்ற காரணத்திற்காக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00 மணி முதல் காலை 6.30 மணி வரையிலும் பால் விநியோகம் செய்யப்படும் எனவும், 21 ஆம் தேதி கூடுதல் மணி நேரம் பால் விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.