மெர்சல் படத்திற்கு தமிழக அரசு ஆதரவு ; மாஃபா பாண்டியராஜன் அதிரடி
விஜய் நடித்து சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்திற்கு தமிழக அரசின் ஆதரவு உண்டு என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்து சமீபத்தில் வெளியான மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி குறித்து தவறான கருத்துகள் கொண்ட வசனம் இடம் பெறுவதாக தமிழிசை சவுந்தரராஜன் போர்க்கொடி தூக்கினார். அவரைத் தொடர்ந்து ஹெச்.ராஜா, அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்தனர். முக்கியமாக விஜயை, ஜோசப் விஜய் என தொடர்ந்து அழைத்து வருகிறார் ஹெச்.ராஜா. அதோடு, விஜயின் வாக்காளர் அட்டையை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ‘உண்மை கசக்கும்’ எனக் குறிப்பிட்டுருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல சினிமா பிரபலங்கள் ஹெச்.ராஜாவிற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மெர்சல் படத்திற்கு தமிழக அரசின் ஆதரவு உண்டு எனக் கூறியுள்ளார். மேலும், தணிக்கை குழு தனது கடமையை சரியாக செய்துள்ளது எனவும் தெரிவித்தார்.
ஏற்கனவே, மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மெர்சல் படத்திற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு ஆதரவு தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.