தகுதியில்லாத எங்களிடம் ஏன் வாக்கு கேட்டு வந்தீங்க.. மேயர் பிரியாவிடம் சரமாரி கேள்வி கேட்ட பெண்கள்..!
நிவாரணம் பெற தகுதி இல்லை என்று எங்களை ஒதுக்கிய நீங்கள் எதற்காக எங்களிடம் ஓட்டு கேட்டு வருகிறீர்கள் என மேயர் பிரியாவிடம் கொளத்தூர் பகுதி பெண்கள் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மேயர் பிரியா மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகிய இருவரும் வடசென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது அங்கு கூடிய பெண்கள் சென்னையில் வெள்ளம் வந்த போது நிவாரணம் பெற தகுதி இல்லாதவர்கள் என எங்களை ஒதுக்கிய உங்களுக்கு எதற்காக நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று பெண்கள் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 840 குடும்பங்கள் வசிக்கும் நிலையில் ஒரு சிலருக்கு மட்டுமே நிவாரண டோக்கன் வழங்கியதாகவும் மற்றவர்களிடம் எங்கள் கட்சிக்கு பிடித்தாயா? கோஷம் போட்டாயா? என்று ஏக வசனத்தில் பேசி நிவாரணம் பெற நீங்கள் எல்லாம் தகுதி இல்லாதவர்கள் என்று கூறியதாகவும் பெண்கள் குற்றம் காட்டினார்.
நாங்கள் கஷ்டப்படும் போது கண்டு கொள்ளாத நீங்கள் இப்போது வாக்கு கேட்டு மட்டும் ஏன் வருகிறீர்கள் என பெண்கள் ஆவேசமாக கேள்வி கேட்டதை அடுத்து அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் ப்ரியா, அவர்களை சமாதானப்படுத்தி அந்த பகுதியில் இருந்து சென்றனர். இந்த சம்பவம் கொளத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva