புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 மே 2022 (08:48 IST)

தேர்வறையில் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை – சுகாதாரத்துறை செயலாளர்!

இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில் தேர்வறையில் மாஸ்க் அணிய வேண்டிய அவசியமில்லை என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் இன்று 12ம் வகுப்பிற்கும், நாளை 10ம் வகுப்பிற்கும் அரசு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தடையில்லா மின்சாரம், வினாத்தாள் அறைகளுக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று தேர்வு தொடங்கும் நிலையில் தேர்வறையில் பின்பற்ற வேண்டிய கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து நேற்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதில் மாணவர்கள் தேர்வறையில் மாஸ்க் அணிவது அவசியம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் மாணவர்கள் நீண்ட நேரம் மாஸ்க் அணிந்து கொண்டு தேர்வெழுதுவது சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் பேசிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் தற்போது மாணவர்கள் தேர்வறையில் மாஸ்க் அணிய அவசியமில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகள் தேர்வறையில் பின்பற்றப்படுவதால் மாஸ்க் அணிய வேண்டியது அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.