இந்திய அரசு சொன்னால் தமிழர்களுக்கு வேலை! – மலேசிய அமைச்சர்!
இந்திய அரசு சொன்னால்தான் மலேசியா வரும் தமிழர்களுக்கு பல துறைகளில் பணி வழங்க முடியும் என மலேசிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் செல்வோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகமாகி வருகிறது. முக்கியமாக தமிழ்நாட்டிலிருந்து தமிழ் மக்கள் பலர் மலேசியா, சிங்கப்பூர், சவுதி நாடுகளுக்கு அதிகமாக பணி நிமித்தம் செல்கின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் வந்திருந்த மலேசிய மனிதவளத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ.எம்.சரவணன் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது மலேசியாவில் உள்ள தமிழக தொழிலாளர்கள் நலன் குறித்து பேசினார்.
அப்போது அவர் “தமிழ்நாட்டிலிருந்து மலேசியா வந்து பணிபுரியும் தமிழர்களுக்கு உதவும் வகையில் மலேசியாவில் செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்களது புகார்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது இந்திய அரசுடன் கொண்டுள்ள புரிந்துணர்வின்படி இரண்டு துறைகளில் மட்டுமே தமிழர்களுக்கு பணி வழங்கப்படுகிறது. இந்திய அரசு வேண்டுகோள் விடுத்தால் பிற துறைகளிலும் தமிழர்களுக்கு பணி வழங்கப்படும்” என அவர் கூறியுள்ளார்.