செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 16 ஏப்ரல் 2018 (16:00 IST)

பேராசிரியை விவகாரத்தில் உரிய நடவடிக்கை : மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி

தனியார் கல்லூரியின் கணித பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளிடம் தவறாக பேசிய விவகாரம் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் செல்லதுரை தெரிவித்துள்ளார்.

 
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்பட்டு வருகிறது இந்த கல்லூரியில் கணித பேராசிரியையாக பணிபுரிந்து வருபவர் நிர்மலா தேவி. இவர் தனது வகுப்பில் படித்து வரும் 4 மாணவிகளை அழைத்து உயரதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறும் இதனால் பணம், சலுகைகள் உள்பட பல்வேறு பயன் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறிய ஆடியோ நேற்று வெளியானது.
 
இந்த ஆடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பேராசிரியை தேவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் தான் பேசியது மாணவிகளால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக பேராசிரியை தேவி விளக்கம் அளித்தார். இருப்பினும் அவரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. பேராசிரியை ஒருவரே உயரதிகாரிகளுக்கு புரோக்கர் போல் செயல்பட்டதாக கூறப்படும் இந்த விவகாரத்தால் மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
இந்நிலையில், இதுபற்றி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை “இந்த விவகரம் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பேராசியை பேசியதாக வெளியான ஆடியோவின் உண்மை தன்மை ஆராயப்படும். இதற்கு முன் இதுபோன்ற புகார்கள் வந்ததில்லை. மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும். அவர் கூறியதற்கும், பல்கலைக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. நிர்மலா தேவியின் பிண்ணனி, அவர் பேசியதன் பின்னணி குறித்து விசாரிக்கப்படும். யார் தவறு செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என செல்லதுரை தெரிவித்தார்.