1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (13:37 IST)

கோயிலை பூட்டி வைப்பது சாமியை சிறை வைப்பதற்கு சமம்..! நீதிமன்றம் காட்டம்..!!

Madurai Court
கோயிலை பூட்டி வைப்பது சாமியை சிறை வைப்பதற்கு சமம் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.   
 
மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் பூட்டி வைக்கப்பட்டுள்ள முத்தாலம்மன் மாரியம்மன் கோயிலைத் திறந்து, நாள்தோறும் பூஜைகள் நடத்த அனுமதி வழங்க கோரி,  பாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதி, “இரு சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக கோயிலைப் பூட்டியதால், சாமிக்கு பூஜைகள் செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார். கோயிலைப் பூட்டி வைப்பது, சாமியை சிறை வைப்பதற்கு சமம் என்று நீதிபதி கூறினார். குற்ற வழக்கில் சிறையில் உள்ள கைதிகளுக்கு உணவு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கிறது என்றும் இந்த வழக்கில் சாமிக்கு தேவையான பூஜை உள்ளிட்ட தேவைகள் கிடைக்கப் பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
கோயிலை காலவரையின்றி மூடி வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்த நீதிபதி சுவாமிநாதன், இதுபோன்ற நிகழ்வுகளை அதிகாரிகள் வேடிக்கை பார்க்க கூடாது என்று காட்டமாக கூறினார். இந்த வழக்கில் யாருக்கு உரிமை உள்ளதோ, அவர்களுக்கு சாதகமான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும்  கோயிலைத் திறந்து வழக்கம் போல் பூஜைகள் நடத்த வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

 
இதில் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், சம்பந்த பட்டவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று அவர் கூறினார். மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, எந்த கோயிலையும் பூட்டக் கூடாது என நீதிபதி தெரிவித்தார்.