வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 31 ஜூலை 2024 (12:34 IST)

சட்டசபைக்குள் குட்கா கொண்டு சென்று விவகாரம்.! முதல்வர் - திமுக எம்எல்ஏக்களுக்கு அதிரடி உத்தரவு..!!

highcourt
சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பான உரிமை மீறல் நோட்டீசுக்கு விளக்கம் அளிக்கும்படி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு வந்தது தொடர்பாக, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. 
 
இந்த நோட்டீசை உயர்நீதிமன்றம் இரு முறை ரத்து செய்தது.  இதை எதிர்த்து அதிமுக ஆட்சியில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வு, உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து முன்கூட்டியே வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்தது.
 
அந்த நோட்டீஸ் ஒரு முடிவை எட்ட வேண்டும் என குறிப்பிட்ட நீதிபதிகள், சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிந்து விட்டால் உரிமை மீறல் பிரச்சனை காலாவதியாகி விட்டதாக திமுக எம்எல்ஏக்கள் தரத்தில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்க முடியாது என்று கூறி, உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்து கடந்த 2021 பிப்ரவரி மாதம் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர்.

 
மேலும், உரிமை மீறல் நோட்டீசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் உரிமை குழுவிடம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், உரிமைக்குழு சட்டமன்ற விதிகளை பின்பற்றி, விசாரணை நடத்தி இறுதி முடிவு எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.