செவ்வாய், 19 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2016 (14:01 IST)

முஸ்லிம்களாகிய நாங்கள் உங்களின் சகோதரர்கள்: ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஒரு கடிதம்

சகோதரி ஸ்வாதி கொலை வழக்கு தொடர்பாக திரு Y G மஹேந்திரன் மற்றும் S V சேகர் அவர்கள் வைத்த வாதங்கள் அது தொடர்பாக சமூக வலைதளங்களில்  நடைபெற்ற விவாதங்கள்  எங்களை மிகவும் காயப்படுத்தியது.


 

 
நாங்கள் பின்பற்றும் மதத்தின் தோற்றம் வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம், ஆனால் எங்களின் ஆணி வேர் இந்த தேசத்தில்தான் உள்ளது. நாங்கள் தினமும் படிக்கும் இறை வேதம் மக்களை நேசிப்பதும் தாய் நாட்டை நேசிப்பதும் இறை நம்பிக்கையின் ஒரு பகுதி என சொல்லி தருகிறது. 
 
எங்களின் கண்மணி நாயகம் முஹம்மது நபி அவர்களின் இறுதி அரபா உரை எங்களின் யாபகத்திற்கு வருகிறது. அவர் அந்த உரையில் உங்களில் ஒரு அரபி, அரபி அல்லாதவனை விடவும், வெள்ளை நிறம் உடையவன் கருப்பு நிறம் உடையவனை விடவும், மேன்மை ஆனவன் அல்ல. இறைவன் முன் அனைவரும் சமம் என்று எங்களுக்கு தெளிவுப்படுத்தி இருக்கிறார். முஸ்லிம்களாகிய நாங்கள் உங்களின் சகோதரர்கள்.

சகோதரர் Y G மஹேந்திரன் அவர்களே..
 
கொலை வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணையின் போதே பிலால் என்ற முஸ்லிம் தான் கொன்றான், அவன் இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்தவன் என்பதற்காக மதசார்பற்ற, திராவிட, தலித் இயக்கள் குரல் கொடுக்கவில்லை என்று நீங்கள் சொன்ன போது வேதனை அடைந்தோம். இந்த தேசத்தில் நடந்த மத கலவரங்கள் அனைத்திலும் உடமைகளையும் உயிர் இழப்புக்களையும் அதிகம் சந்தித்தவர்கள் நாங்கள். அதை நான் எழுதவில்லை.
 
அந்த கருத்தில் எனக்கு உடன்பாடு உள்ளது என்று நீங்கள் சொன்ன போது அதிர்ச்சி அடைந்தோம். உங்களின் சித்தாத்தங்கள் வேறு ஆக இருக்கலாம். ஆனால் லக்கும் தீனுக்கும் வலிய தீன் (உன் மதம் உனக்கு என் மதம் எனக்கு) என்று எங்களின் மதம் எங்களுக்கு போதிக்கிறது. ஏன் பிராமணர்களும் முஸ்லிம்களும் வேறு வேறு கிரகத்தில் வந்தவர்கள் அல்லவே?. எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகளே. ஒரு வேளை உங்கள் சகோதரனே  தவறு செய்தாலும் அதை ஊர் எல்லாம் சொல்வீற்களா என்ன ?
 
வடக்கில் உள்ள சாத்விகளிடம் ஏதேனும் பயிற்சி எடுத்து கொண்டீர்களா ?
 
உங்கள் மீது சில இஸ்லாமிய அமைப்புகள் வைக்கும் விமர்சனங்கள், உங்களின் மகளும் எங்களின் சகோதரி தொடர்பு உடைய கட்சி சார்ந்து நீங்கள் விமர்சிக்கப்படுவது எங்களுக்கு வேதனை தருகிறது.
 
சகோதரர் S V சேகர் அவர்களே
 
தங்களது சகிப்புத்தன்மைப் பற்றிய தொலைக்காட்சி பேட்டி பார்த்தேன். நீங்கள் என்ன பேச வேண்டும் பேச கூடாது என்று சொல்ல நாங்கள் மெத்த படித்தவர்கள் அல்ல. ஆனால் அரசாங்கம் எங்களுக்கு தரும் புனித யாத்திரை மானியம் பற்றி பேச நீங்கள் யார்?
 
பல குழந்தைகளை பெற்ற ஒரு தாய் தனது கடைக்குட்டி பையனுக்கு, நோன்ஜான் குழந்தைக்கு, அதிகம் ஊட்டும் ஒரு கவளம் சோறை போலத்தான் இந்த மானியங்கள். அதை மற்ற குழந்தைகள், நம் சகோதரன்தானே    என்று  மகிழ்ச்சியுடன்  ஏற்றுக் கொள்கின்றன. அதற்காக குழந்தைகள் அம்மாவிடம் சண்டை போடுவது இல்லை. சகிப்புத்தன்மைப்  பற்றி பேசும் நீங்கள் எங்களிடம் சகிப்புத் தன்மையுடன் பேச வேண்டும் சகோதரரே
 
ரம்ஜான் வாழ்த்துக்கள்
 
ராம காவியத்தில் அனுமன் தனது நெஞ்சைப் பிளந்து ராமரின் உருவம் காட்டி தனது அன்பை நிரூபிப்பார். அதைப் போல நாங்களும் எங்களின் தேசப் பற்றை நிரூபிக்க  எங்களின் நெஞ்சைப் பிளந்து காட்ட வேண்டுமா ?
 
அவ்வாறு நாங்கள் எங்கள் நெஞ்சம்  காட்டினால்,  உங்களின் மூக்கு கண்ணாடியை விலக்கி விட்டு பாருங்கள்  அதில் நீங்கள்தான் தெரிவீர்கள். ஏன் எனில் நீங்களும் நாங்களும் சேர்ந்தது தான் இந்தியா. உங்களின் சகோதர்களாகிய நாங்கள் எங்களின் புஜம் தாழ்த்தி எங்களின் கரங்கள்  தருகிறோம். எங்களின் மீதான   வன்மம் விட்டு எங்களின் கரங்கள் பற்றி உங்கள் சகோதர்களுக்கு சொல்லுங்கள் ரம்ஜான் வாழ்த்துக்கள்..







இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 
இயந்திரவியல் துறை ,
சத்தியபாமா பல்கலைக்கழகம் ,
சென்னை