அமைச்சர்களுக்கு தனி சட்டமா? வழக்கு போடுங்க! – நியாயம் கேட்கும் எல்.முருகன்!
ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் மீது வழக்குப்பதியப்பட்டுள்ள நிலையில் தமிழக அமைச்சர்கள் மீதும் வழக்கு பதிய வேண்டும் என அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் பாஜக மாவட்ட அலுவலகம் திறக்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். அலுவலக திறப்பு விழாவில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாகவும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல்.முருகன் “அதிமுக அமைச்சர்களும் மற்ற பிற கட்சி பிரமுகர்களும் கூட மாவட்டம் தோறும் சென்று கூட்டங்களை நடத்துகிறார்கள். வழக்கு பதிவதென்றால் அவர்கள் மீதும்தான் பதிய வேண்டும்” என கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் பாஜக முன்னை விட மிகவும் பலமாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.