தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் குஷ்பு.. என்ன காரணம்?
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பு ராஜினாமா செய்தார் என்றும், சுமார் ஒன்றரை வருடங்களாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பணியாற்றிய நிலையில் அவர் ராஜினாமா செய்த நிலையில் அவரது ராஜினாமா கடிதத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஏற்று கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தனது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜூலை மாதம் மகளிர் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். மேலும் அவர் தனது எக்ஸ் தள பயோவில் மகளிர் ஆணைய உறுப்பினராக பதிவிட்டு இருந்ததையும் நீக்கம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: 14 ஆண்டுகால அரசியல் அர்ப்பணிப்புக்கு பிறகு, இன்று ஒரு இதயபூர்வமான மாற்றத்தை உணர்வதாக அறிகிறேன். பாஜகவில் முழுமையாக சேவை செய்வதற்காக நான் தேசிய மகளிர் ஆணையத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளேன்.
இப்படி ஒரு வாய்ப்பை வழங்கிய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர்களுக்கு எனது நன்றிகள். என்னுடைய விசுவாசம், நம்பிக்கை எப்போதும் பாஜகவுக்கு இருக்கும். நான் மீண்டும் தீவிர அரசியலுக்கு முன்னெப்போதும் இல்லாத உற்சாகத்துடன் வந்துவிட்டேன். .
தேசிய மகளிர் ஆணையத்தில் அதற்கென சில கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் தற்போது நான் சுதந்திரமாகவும், முழுமனதுடன் கட்சிக்கு சேவை செய்ய முடியும். சென்னை கமலாலயத்தில் நடக்க உள்ள கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். எனது ராஜினாமா காரணமாக வதந்தி பரப்புபவர்கள் நிம்மதியாக தூங்கலாம். என்னுடைய இந்த மறுவருகை நேர்மையானது, மேலும் கட்சி மீது நான் வைத்திருக்கும் அசைக்க முடியாத அன்பின் காரணமாக தூண்டப்பட்டது என குஷ்பு தெரிவித்துள்ளார்.
Edited by Siva