புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (14:11 IST)

கடவுளே வந்தாலும் காங்கிரஸ் அஞ்சாது! – கே.எஸ்.அழகிரி திட்டவட்டம்

நாங்குநேரி தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து தமிழக காங்கிரஸ் – திமுக இடையே சலசலப்புகள் ஏற்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகள் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

தமிழக சட்டசபை தொகுதிகளான நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வசந்தகுமார்தான் பதவி வகித்து வந்தார். மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதில் வெற்றிபெற்று அவர் எம்.பி ஆகிவிட்டதால் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் நாங்குநேரி இடைதேர்தலில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்று அதன் கட்சி பிரமுகர்கள் முதல் தொண்டர்கள் வரை விரும்புகிறார்கள்.

இதுகுறித்து முன்னரே பேசிய காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நாங்குநேரியில் காங்கிரஸும், விக்கிரவாண்டியில் திமுகவும் போட்டியிடலாம் என பரிந்துரைக்க இருப்பதாக கூறியுள்ளார். எனினும் இதுகுறித்து திமுகவோடு கலந்து பேசிய பின் முடிவு அறிவிக்கப்பட்டும் என கூறினார். ஸ்டாலினோ முதலில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கட்டும் என்று கூறி நழுவி விட்டார்.

இந்நிலையில் நாங்குநேரி காங்கிரஸ் நிர்வாகிகள் காங்கிரஸ் வேட்பாலர் ஒருவர் பெயரை சொல்லி, அவர்தான் நிற்பார் அவரை வெற்றிபெற செய்ய வேண்டும் என போஸ்டர் கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விஷயம் திமுக காதுக்கு போக, அவர்கள் கே.எஸ்.அழகிரியை அழைத்து பேசியதாகவும், இதனால் அழகிரி சம்பந்தபட்ட நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனை மறுத்த கே.எஸ்.அழகிரி “காங்கிரஸ் யாருக்கும் பயந்து நோட்டீஸ் அனுப்பவில்லை. கூட்டணி கட்சிகள் மட்டுமல்ல, அந்த கடவுளே அழுத்தம் கொடுத்தாலும்  காங்கிரஸ் அஞ்சாது” என்று பேசியுள்ளார்.

கே.எஸ்.அழகிரி இப்படி பேசியிருப்பது காங்கிரஸுக்கும், திமுகவுக்கு இடையே ஏதோ சச்சரவு ஏற்பட்டிருப்பதால்தான் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.