திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (09:01 IST)

வீடு முழுவதும் விஷவாயு; வித்தியாசமாக தற்கொலை! – கேரளாவில் அதிர்ச்சி!

கேரளாவில் வீடு முழுவதும் விஷ வாயுவை நிரப்பி குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் கொடுங்கல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆஷிப். பொறியாளரான இவர் தனது தந்தை, மனைவி மற்றும் 2 மகள்களுடன் தனது சகோதரி வீட்டின் மேல்மாடியில் வசித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று காலை வெகு நேரமாகியும் ஆஷிப் குடும்பத்தினர் வெளியே தென்படாததால் அவரது சகோதரி மாடிக்கு சென்று கதவை தட்டியுள்ளார். யாரும் கதவை திறக்காததால் போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீஸார் வெகுநேரம் முயற்சித்து கதவை திறந்தபோது விஷவாயு பரவியிருப்பதை கண்டறிந்த அவர்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேறியுள்ளனர்.

பின்னர் தீயணைப்பு துறையினர் வந்து கதவு, ஜன்னல்களை உடைத்து விஷ வாயு வெளியேறும்படி செய்துள்ளனர். உள்ளே சென்று பார்த்தபோது ஆஷிப் மற்றும் குடும்பத்தினர் விஷ வாயு தாக்கத்தால் இறந்து கிடந்துள்ளனர். விஷ வாயு வெளியே பரவாமல் இருக்க ஜன்னல், கதவு இடுக்குகளில் டேப் ஒட்டப்பட்டிருந்துள்ளது.

சமீப காலமாக கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்த ஆஷிப் விஷ வாயுவை வீட்டில் பரவ செய்து குடும்பத்தினரோடு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.