1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 18 ஜனவரி 2018 (12:20 IST)

பில்லி சூனியம் விலக சாமி மாடுகள் விடும் நிகழ்ச்சி - வீடியோ

பில்லி சூனியம் விலகவும், திருமணத் தடைகள் நீங்கவும் 1300 ஆண்டுகளாக நடைபெறும் சாமி மாடுகள் விடும் நிகழ்ச்சி சமீபத்தில் கரூரில் நடைபெற்றது.

 
பொங்கல் பண்டிகையை ஒட்டி, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் முழுவதும் திரும்பிய பக்கமெல்லாம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி களைகட்டியது. ஆனால் கரூர் மாவட்டத்தில் ஒரு சில கிராமங்களில் விநோதமாகவும், சற்று வித்யாசமாக ஜல்லிக்கட்டு சாயல் கொண்டது போல, எருதுகள் தாண்டும் நிகழ்ச்சி மற்றும் எருதுகளை வணங்கும் நிகழ்ச்சி கடந்த 5 தினங்களாக கொண்டாடப்பட்டு வருகின்றது. சாமி மாடுகளான கோயில் காளைகளின் இந்த விநோத சம்பவம் நிகழ்ச்சி கடந்த 1300 ஆண்டு காலமாக நடந்து வருவது மேலும் பிரமிப்பூட்டி வருகின்றது. 
 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேலம்பாளையம் கிராமத்தில் சாமி மாடுகள் மார்கழி மாதம் கடைசி தேதி அன்று ஒன்று கூடி வேலம்பாளையம் பகுதியிலிருந்து கிளம்பி, அங்கிருந்து சாலிப்பாளையம், காளிப்பாளையம், மண்மங்கலம் என்றெல்லாம் சுமார் 18 பட்டி கிராமங்களுக்கு சென்று ஐந்து நாட்கள் நடைபாதையாக சென்று அங்கிருக்கும் மக்களின் மரியாதையை பெற்றுக் கொள்ளும்.
 
2 அடிக்கும் குறையாத, மீக நீளமுள்ள வித்யாச கொம்புகள் கொண்ட மாடுகள் மூக்கணாங்கயிறு குட்டாமல் அப்படியே சாமிக்கு நேர்ந்து விட்ட இந்த மாடுகள் முழுக்க, முழுக்க சாமியின் கட்டுப்பட்டில் ஒவ்வொரு நாள், ஒவ்வொரு ஊர்களுக்கு சென்று, அங்கிருக்கும் தெய்வங்களை வழிபடுமாம், மேலும் அங்குள்ள ஊர் பொதுமக்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமில்லாமல், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை கீழே தரையை தொட்டு வணங்குதல், மற்றும் மாடுகளுக்கு அங்கப்பிரதட்சணம் செய்தல் என்றதோடு, மட்டுமில்லாமல், அந்த காளைகளுக்கு பலவித வண்ண மாலைகள் அணிவிக்கப்பட்டு, அந்த காளைகளுக்கு ராஜமரியாதை செலுத்தும் காட்சியோடு உருமி சத்தம் உள்ளிட்ட காட்சிகள் அங்குள்ள ஊர் முக்கியஸ்தர்கள் மட்டுமில்லாமல், பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. 
 
மேலும் கடந்த சில வருடங்களாக நீதிமன்றத் தடையினால் தான் இந்த விழா நிறுத்தப்பட்டதாகவும், தற்போது அரசின் அனுமதியோடு, நடைபெறும் இந்த விநோத விழாவில் ஏராளமான மாடுகள், அங்குள்ள பஞ்சாயத்து திண்ணைகளை ஏறி தாண்டி அமர்க்களப்படுத்துமாம்,. மேலும் இந்த விநோத வழிபாடு கடந்த பல தலைமுறைகளாக இருந்ததோடு, மன்னர் காலத்து மரபாகவும் இருந்து வந்துள்ளது. இந்த வழிபாடு செய்தால், ஊர் பொதுமக்களுக்கு பில்லி சூனியம் இல்லாமல், உலக நன்மை பெறும் என்பதோடு, திருமண தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
 
மேலும் தொன்று தொட்டு நடைபெற்று வரும் இந்த விநோத ஜல்லிகட்டு சாயல் போன்ற இந்த முறை இப்பகுதி மக்களை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. மேலும் மிகக்கூர்மையான இந்த மாடுகள் யாரையும், எந்த துன்பத்திலும் ஈடுபடுத்தாது ஒரு புறம் இருக்க, அவைகள் ஒரு சேர தான் ஊர் விட்டு ஊர் சென்று பிறகு ஒரு இடத்தில் நிற்கும் என்பது காலம், காலமாக நடைபெற்று வரும் சம்பவம் ஆகும்
 
பேட்டி : பெரியசாமி – ஊர் முக்கியஸ்தர் – கரூர் மாவட்டம்
 


 
சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்