மீண்டும் ஒலிக்கும் கருணாநிதியின் குரல் - திமுகவினர் ஆரவாரம்
திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் தன் காந்தக்குரலில் உரையாற்றுவார் என அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர் கோபால் தெரிவித்துள்ள விவகாரம் திமுகவினர் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலம் மற்றும் முதுமை காரணமாக வீட்டை விட்டு வெளியே வராமல் ஓய்வு எடுத்து வருகிறார். அந்நிலையில் நேற்று இரவு திடீரென அவர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்திற்கு சென்றார்.
முரசொலி பவளவிழாவை அடுத்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்ட கருணாநிதி அங்கு வைக்கப்பட்டிருக்கும் தனது மெழுகுச்சிலையை பார்வையிட்டார். அத்துடன் மெழுக்குசிலையுடன் அவர் புகைப்படமும் எடுத்து கொண்டார்.
அங்கிருந்தவைகளை மு.க.ஸ்டாலின் ஒவ்வொன்றாக விளக்க, கருணாநிதி அதை புரிந்து கொண்டு புன்னகைத்தவாறே இருந்தார்.
சுமார் ஒரு ஆண்டுக்கு பின்னர் கருணாநிதி முரசொலி அலுலகத்திற்கு வந்துள்ள செய்தி அறிந்த திமுகவினர் ஆயிரக்கணக்கில் முரசொலி அலுவலகம் முன் குவிந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேல் அங்கு இருந்த கருணாநிதி, அங்கு கூடியிருந்தவர்களுக்கு கையசைத்து விட்டு அங்கிருந்து அவர் கோபாலபுரம் கிளம்பி சென்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் கோபால் “ கருணாநிதி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் மற்றொரு அதிசயத்தை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்” எனக் கூறினார்.
அதாவது, அவரது தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள குழாயை அகற்றுவது பற்றி மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. எனவே, விரைவில் கருணாநிதி ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே’ என காந்த குரலில் பேசுவார் எனத் தெரிகிறது. இந்த செய்தி, திமுக தொண்டர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.