சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறாது.. மணிசங்கர் ஐயர் கருத்தால் காங்கிரஸார் அதிர்ச்சி..!
காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், கேரளாவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறாது என்றும், அங்கிருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் கம்யூனிஸ்டுகளை விட ஒருவரையொருவர் அதிகமாக வெறுப்பதே இதற்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அக்கட்சியின் முக்கிய தலைவர்களான சசி தரூர், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் பவன் கேரா ஆகியோரை விமர்சித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை புகழ்ந்து பேசிய மணிசங்கர் அய்யர், ராஜீவ் காந்தியின் கனவை பினராயி விஜயன் நிறைவேற்றி வருவதாக கூறி அவர் காலில் விழுந்து வணங்க போவதாகவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த பவன் கேரா, அய்யர் பேசுவது அவரது தனிப்பட்ட கருத்து என்றும், அவருக்கும் காங்கிரஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறினார்.
இதற்கு பதிலடியாக, பவன் கேராவை ஒரு "பொம்மை" என்று அய்யர் விமர்சித்துள்ளார். மேலும், சசி தரூர் ஒரு "பாகிஸ்தான் எதிர்ப்பு" நபர் என்றும், அவர் அடுத்த வெளியுறவு அமைச்சராக துடிப்பதாகவும் அய்யர் கிண்டலடித்துள்ளார்.
கேரள சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், மணிசங்கர் அய்யரின் இந்தப் பேச்சு காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva