திமுகவில் இணைய நிபந்தனை விதித்தாரா காளியம்மாள்? தவெகவிடமும் பேச்சுவார்த்தை..!
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள், திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், திமுகவில் இணைய வேண்டும் என்றால் சில நிபந்தனைகள் விதித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், தமிழக வெற்றி கழகத்துடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.
நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்த காளியம்மாள், நேற்று கட்சியிலிருந்து விலகியதை அடுத்து, அவர் எந்த கட்சியில் சேரப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதலில், அவர் திமுகவில் இணைய போகிறார் என்ற தகவல்கள் வெளியாகின. மேலும், திமுகவின் முக்கிய நிர்வாகியுடன் அவர் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அப்போது காளியம்மாள் விதித்த சில நிபந்தனைகளை திமுக தலைமை ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால், அதே நேரத்தில், காளியம்மாள் தமிழக வெற்றி கழகத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தியது, திமுகவினருக்கு பிடிக்காததாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவராகவே ஒரு முடிவுக்கு வரட்டும் என்று திமுக இந்த விஷயத்தில் இருந்து விலகியது என தகவல்கள் வெளியாகின்றன.
திமுகவிடம் காளியம்மாள் வைத்த முக்கியமான நிபந்தனை, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாகை தொகுதி வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்பதே என கூறப்படுகிறது. இதற்கான உறுதிமொழியை திமுக தரப்பில் அவர் கேட்டதாகவும், திமுகவில் இணைந்தால் எம்எல்ஏ ஆக வாய்ப்பு அதிகம் என்பதால், அவர் திமுகவையே தேர்வு செய்யக்கூடும் என பேசப்படுகிறது.
Edited by Mahendran