திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 10 ஜூலை 2018 (12:11 IST)

அதிமுகவை விமர்சித்த அமித்ஷா : பூசி மழுப்பிய ஜெயக்குமார்

அதிமுக ஊழல் கட்சி என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விமர்சனம் செய்திருப்பது பற்றி கருத்து கேட்ட போது அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பூசி மழுப்பியுள்ளார்.

 
தமிழகத்தில் பாஜக வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்தும், மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கவும் அமித்ஷா நேற்று சென்னைக்கு வந்தார்.விமான நிலையத்திலிருந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
 
அதன்பின் பாஜக தொண்டர்கள் முன் பேசிய அவர் “இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் ஊழல் அதிகமாக நடக்கிறது” என குறிப்பிட்டு பேசினார். அவர் ஹிந்தியில் பேசியதை ஹெச்.ராஜா தமிழில் மொழி பெயர்த்தார்.
 
இந்நிலையில், இதுபற்றி அமைச்சர் ஜெயக்குமார் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் “சொட்டு நீர் பாசனம் என அமித்ஷா பேசியதை சிறுநீர் பாசனம் என ஹெச்.ராஜா மொழி பெயர்த்துள்ளார். அதுபோல், அதிமுகவை பற்றி அமித்ஷா நல்ல விதமாகத்தான் பேசியிருப்பார். ஹெச்.ராஜா அதை தவறாக மொழி பெயர்த்திருக்கலாம்” என பதிலளித்தார்.
 
அதிமுகவிற்கு எதிராக எந்த கேள்வியை நிருபர்கள் எழுப்பினாலும், அதற்கு நேரிடையாக பதில் கூறாமல், சுற்றி வளைத்து சம்பந்தம் இல்லாமல் பேசி ஒப்பேற்றுவது போல் பதில் கூறுவதை அமைச்சர் ஜெயக்குமார் வாடிக்கையாகவே வைத்துள்ளார் எனவும், பாஜகவின் தயவால் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெறுவதால், அமித்ஷாவிற்கு எதிராக கருத்து தெரிவிக்க பயந்தே ஜெயக்குமார் இப்படி பதிலளித்துள்ளார் என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.