எல்லா சாலைகளும் அலங்காநல்லூர் வாடி வாசலை நோக்கி
எங்கெங்கும் காணினும் அக்கினி குஞ்சுக்கள்
தை மாத கடும் பனி இவர்களை தீண்ட வில்லை. எரியும் வேள்வியில் இவர்களின் உறங்காத உள்ளங்கள். கதிர் ஒளியாய் புறப்பட்டது இளையோர் கூட்டம். முதல் முறையாக அரசியல் இல்லாத ஒரு போராட்டத்தை நாம் கண்டுக் கொண்டு இருக்கிறோம். ஆண் பெண் பேதம் இன்றி திரண்ட வீர மங்கைகள். இது வேற வேற லெவல்.
மெரீனாவில் மாணவர் அலை
காவேரிக்காக போராடாதக் கூட்டம், டாஸ்மாக் எதிராக திரளாத கூட்டம் என ஏச்சுகள் ஒருபுறம், இலங்கை தமிழர்களுக்காக போராடாதக் கூட்டம், அணு உலைக்கு எதிராக திரள திராணி இல்லாத கூட்டம் என பேச்சுகள் மறுபுறம் ஆனாலும் எங்கெங்கும் காணினும் அக்கினி குஞ்சுக்கள். ரதம் செலுத்த வேண்டி பாகன்களில் ஒருவர் தூங்கி விட்டார் மற்றும் ஒருவர் தூங்கிவது போல நடித்து கொண்டிருக்கிறார். தூக்குபவனை எழுப்பி விடலாம் தூக்குவது போல நடிப்பவனை எழுப்ப முடியாது.
லட்சம் ஆயிரத்தில் ஒருவன்கள்
அன்ன சத்திரம் ஆயிரம் படைப்பதை விட ஆங்கோர் ஏழைக்கு கல்விக் கண் புகட்டுவது சாலச் சிறந்தது. பல லட்சம் மாணவர்கள் சேர்ந்து உறங்கி விட்ட ஒரு அரசுக்கு பாடம் புகட்டி வருகிறார்கள். மக்கள் பிரதிநிதிகளுக்காக களங்கள் காத்திருக்க வில்லை. களத்தில் காளைகள்; காளைகளுங்காக. தாடிகள் எல்லாம் தாகூரா ? மீசைகள் எல்லாம் பாரதியா ? என்று தெரியவில்லை. களம் கண்ட அனைவரும் பாரதிகள் தான் தாகூர்கள் தான். அலங்காநல்லூர் வாடிவாசல் போராட்டம் பார்த்தேன், வியத்தேன் மெரீனாவின் மாணவ அலையை பார்த்தேன். முதல் முறையாக பெருமை கொள்கிறேன். எம் மாணவர்களுக்கு முன்பு நாங்கள் எல்லாம் துரும்புகள் தான். எங்களுக்கு கிடைக்காத களம், கிடைக்காத தோழர்களின் இணைப்புக்கள், எம் மாணவர்களுக்கு கிடைத்து இருக்கிறது.
நாடு பற்றி எரியும் போது பிடில் வாசித்த நீரோ மன்னனும், தமிழ் நாடு பற்றி எரியும் போது ஆயிரத்தில் ஒருவனை அபிராமி மாலில் குலு குலு அறையில் பார்த்து ரசித்த பன்னீரும் அவரது அமைச்சர்களும் ஒன்று தான். மேன்மை தாங்கிய முதல்வர் பன்னீர் அவர்களே ! வாருங்கள் மெரீனாவிற்கு லட்சம் ஆயிரத்தில் ஒருவன்களை காட்டுகிறேன். நடப்பது நடக்கட்டும் கிழவியை தூக்கி நடு வீட்டில் வை என்பது போல MGR நூற்றாண்டு விழா ? பொன்மனச் செம்மல் உயிருடன் இருந்தால் நிச்சயம் கரி உமிழ்ந்து இருப்பார்.
ஒன் அன் ஒன்லி ஜல்லிக்கட்டு இந்தியா
டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா எல்லாம் போச்சு இருப்பது ஒன் அன் ஒன்லி ஜல்லிக்கட்டு இந்தியா தான். மாண்பு மிகு பிரதமர் அவர்களே ! அப்பனுக்கு வேதம் சொன்ன பாலகன் கதை தெரியுமா ? தெரியாவிட்டால் மெரீனா வாருங்கள் ! உங்களுக்கும் மாணவ வேதம் கற்றுத் தரப்படும். கருப்பு குடியரசு என்று பேசுகிறார்கள். இப்போதும் வாய் திறக்காமல் எப்போது திறப்பீர்கள் ? நாங்கள் உங்களின் மன் கி பத்திற்க்காக காத்திருக்க வேண்டுமா ? ஜனநாயகம் மெரீனாவில் பேசுகிறது வந்து கேளுங்கள் ! வரும் போது ஜெய பிரகாஷ் நாராயணனின் பீகார் மாணவர் இயக்கம் பற்றிய நினைவுகளை சுமந்து வாருங்கள். பாடம் சொல்ல எம் மாணவர்களுக்கு எளிதாக இருக்கும்.
இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர்
[email protected]